17.11.19:
அன்பு தங்கை செல்வராணி அறிய,
நலம் என நம்புகிறேன், அதற்காக ஜெபிக்கிறேன். உன்னைக் காணாமல், உன்னிடம்
பேசாமலிருந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது! ஏன் என்று நீ கேட்கவுமில்லை, நான்
சொல்லவுமில்லை. இருந்தும் அதன் காரணம் உனக்கு
ஏறக்குறைய தெரிந்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்துக்கு பிறகு
வருகிறேன், வசதியாக.
இப்போது என்னை வேதனைப்படுத்தும் விஷயம் என்னவென்றால் நீ உன் பிள்ளைகளோடும்
பேச்சுக்கொடுப்பதில்லையாம் என்பதே! இதெல்லாம் ஒரு தாய்க்கு சேரக்கூடியதா?
‘தன்மையில்லாமல் தான் மிதித்தாலும் தாய்மையிலே மனம் கனியும்’ தாயல்லவா நமக்கு
தெரிந்த நம் தாய்கூட. ‘பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்றும் சொல்வார்கள்.
ஆனால் தாய் மனமே கல்லானால் பிள்ளைகள் எங்கு போவார்கள்! ‘சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்னவாகும்!’ எவ்வளவுதான் அவர்கள் பெரியவர்கள் ஆனாலும், அவர்களுக்கே
பிள்ளைகள் பிறந்தாலும், அவர்கள் உன் பிள்ளைகள் அல்லாமல் ஆவார்களா என்ன!
நீ இப்படி பேசாமல் இருப்பதும், அல்லாமலும் அவர்கள் மனம் புண்படும்படி,
வேதனைப்படும்படி நீ நடந்துகொள்வதும் சரியா? உனது மகனோடு கொஞ்சம் நாள்
சேர்ந்திருக்க மருமகளும் உடனே போவதாக கேள்விப்படுகிறேன். எனவே, அவர்கள்
கூப்பிட்டாலாவது நீ பேசு. ஏன் இப்படி உன்னையும், பிள்ளைகளையும்
வேதனைக்குள்ளாக்குகிறாய்?
ஒரு தாய் என்ற முறையில் உன்னுடைய பொறுப்பையோ திறமையையோ இன்றளவும் யாரும் குறை
கூறியதில்லை, பின் ஏன் இந்த முடிவு! ஒருவேளை அவர்களுக்கும் சில வேதனைகள்
உன்னிடமிருந்து நீ தெரியாமலேயே கிடைத்திருக்கலாமல்லவா? அதை அறிவதும், சரிசெய்வதும்
ஒரு தாயின் கடமையல்லவா?
ஏற்கனவே, நம் குடும்பமும் ஒருவகையில் சீர்குலைந்து நிற்கிறது, நீயும் உன்
அண்ணனும் குடும்பமுமாக சண்டை, கோர்ட்
விவகாரம் என்பதற்கு மேல், அம்மாவிடமும் அதன் வன்மம் காட்டபட்டு அம்மாவின்
மரணத்திற்கே அவன் அந்நியனாக வந்து நின்ற அவல நிலையம் நாம் உணர்ந்ததே. நமது
பக்கத்து வீட்டிலும் இந்த துயரம் நடந்தது, நடந்துகொண்டே இருக்கிறது!
வறுமையில் வாழ்ந்தபோதும் நமது பெற்றோர்கள் இப்படியல்லவே நம்மை வளர்த்தது.
உன்னைப்போன்று கல்வியோ செல்வமோ ஒன்றுமில்லாத நமது அம்மா எவ்வளவு பொறுப்பாக,
பொறுமையாக நம்மை வளர்த்தார்கள், அய்யாவினுடைய பொறுப்பின்மையிலும். நீங்கள்
இருவரும் கல்யாணமானபின்னே, உங்களுக்கு குடும்பம் என வந்தபின்னே நமது வீட்டிலும்
சலசலப்புகளும் சண்டையும் எல்லாம் வரத்தொடங்கியது. உறவுக்காக விட்டுக்கொடுக்க
யாரும் தயாராகாதபோது எப்படி உறவுகள் நிலைக்கும், நீடிக்கும்.
காசு பணம் தேவையாகலாம், ஆனால் அதுவே வாழ்கையை நிர்ணயித்தால் இந்த அவலநிலைதான்
மிச்சமாகும். உனக்கும் வயது ஏறக்குறைய அறுபதாக போகிறது. நாம் விரும்பினாலும்
இல்லையென்றாலும் இனிமேல் நாம் பெரியவர்கள், வயதானவர்கள், வயோதிகர்கள். நாமே
பிள்ளைகளுக்கு மோசமான மாதிரிகை ஆகக்கூடாது. வயதோடு சேர்ந்தே நோய் நொடிகள் வரலாம்,
இயலாமை மற்றும் ஆற்றாமையும். எனவே இனியுள்ள நாட்களில் அதை கருத்தில்கொண்டு
பொறுப்போடு, பக்குவமாக நடந்து நமக்கும் பிறருக்கும், குறிப்பாக பிள்ளைகளுக்கும்
குடும்பத்துக்கும் சந்தோஷத்தை
ஏற்படுத்திக்கொள்வோம்.
உன்னைவிட எனக்கென யாருமில்லை, போக வீடுமில்லை, அதில் எனக்கு இம்மியும்
வருத்தமுமில்லை; ஆனால் நீ வருந்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாதவன் இந்த
அண்ணன் என்பதைமட்டும் மறந்துவிடாதே. நீ நன்றாக இருக்கவேண்டும், பிள்ளைகளோடு,
அவர்கள் பிள்ளைகளோடு, குடும்பங்களோடு, உன் வாழ்க்கை துணையோடு எல்லாம். அதை பார்த்து நான் நிம்மதி அடையவேண்டும், அதுவே
அம்மா அப்பா இல்லாத, தம்பியோடும் தன்கையோடும்கூட நல்ல முறையில் உறவு வைத்துக்கொள்ள
முடியாத எனக்கு நீ தரும், தரவேண்டிய வரம். முடிந்தால் எல்லாரோடும், குறிப்பாக உன்
இரண்டாவது அண்ணனோடும் நீ நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும்.
அம்மா-அய்யாவுக்கு பூசை, செபம், நேர்ச்சை என்பதை விட இதுவே அவர்களுக்கு
உண்மையான ஆன்ம சாந்தி என்பதை மறக்காமலிருப்போம்.
உன்னைப்பற்றி நல்லது மட்டுமே என்றும் நான் கேட்கவேண்டும், உன் பிள்ளைகளும்
பிறரும் உன்னை நினைத்து பெருமைகொள்ள வேண்டும். உனக்கு நன்மை வர, உடல் உள்ள
ஆரோக்கியம் கிடைக்க இறைவனை வேண்டி முடிக்கும் அண்ணன்,
No comments:
Post a Comment