அம்மணமாக அல்ல...
தெரிந்தவரை, முடிந்தவரை அப்பட்டமாக...
நேற்று, 06.04.2021, செவ்வாய்க்கிழமை காலை 4.50 மணிக்கே உடற்பயிற்சிக்காக
வழக்கம்போல் நடக்கும்போது, கேரளா, தமிழ் நாடு மற்றும் சில மாநிலங்களுக்கு
சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருந்ததால் ஊழியர்கள் தேர்தல் தயாரிப்பில் மும்முரமாக
இருப்பதை காண முடிந்தது
.இன்றெல்லாம் பெரும்பாலும் மக்கள் தங்களது வாழ்க்கையையே அரங்கமாக்கி நாடகமாக நடிக்கும்போது இன்றுவரையுள்ள எனது வாழ்க்கையை இயன்றவரை ஏன் வெளிப்படையாக சொல்லிவைக்கக்கூடாது என்று வழக்கத்திற்கு மாறாக மனது கேட்டுக்கொண்டே இருந்தது!
‘அய்யா’ என்றழைக்கும் அப்பாவின் கைகளில் நான் இருக்க காவலர்கள்
முன் நிற்கும் சித்திரம்... ஆம், எங்களுக்கு சொந்தமான வலை, படகு விற்பனையின் காசு
வந்து சேராததால் அதையே எடுத்துவந்து மறைத்துவைத்ததன் பேரில்... விடியலிலேயே தூங்கும்
என்னை தட்டியெழுப்பி ஒருவகையில் வலுக்கட்டாயமாக கோயிலுக்கு கொண்டுபோகும் அம்மா...
ஆற்றில் நீந்தி ஆழமில்லாத அக்கரைக்கு சென்று ஆற்றுச்சிப்பி எடுக்க, காலில் எதோ தட்டி
பயக்க, அதுவே காய்ச்சலாக, ‘பயப்பாடு’ பார்த்து குணப்படுத்த ‘வைத்தியர்’ வந்தது...
பிறந்த ஊர் இரையுமன்துறை. அரபிக்கடலோர கிராமம், அந்த
அழகுக்கு அழகு சேர்க்க மேற்கிலிருந்து கிழக்குநோக்கி வரும் எ வி எம் (அனந்த விக்டோரியா
மகாராணி) கால்வாய் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக பாயும் தாமிரபரணி ஆறோடு சேர்ந்து கடலோடு கலக்கும் அற்புதம்.
இதைப்போன்றே நெய்யாறு கடலில் கலக்கும் பொழியூர் கொல்லங்கோடுதான்
அம்மா ஊர். அம்மாவின் அப்பா கேரள தலைநகர் திருவனந்தபுரம் கடலோர கிராமம் பூந்துறையை
சார்ந்தவர். அதுவும் கரமனயாறு கடலில் கலக்குமிடம்.
அப்பாவின் அப்பா, வரலாற்று சிறப்புமிக்க குளச்சல்
(திருவாங்கூர் – டச்சு படைகள் கடலில் மோதிக்கொண்ட) துறைமுக அண்டை கிராமம்
கோடிமுனையை சார்ந்தவர். அவரை ‘ராசாவின் மகன்’ என அழைக்கப்பட்டதாக ஞாபகம். அப்பாவின்
அம்மா அவரது பெற்றோருக்கு மூத்த பிள்ளை. அவரது தம்பி ‘அடிமைச்சட்டம்பி’ என
அழைக்கப்பட்டார்.
அப்பா: திருவாங்கூர் சமஸ்தானமானதால் பள்ளிகளில் மலையாள வழிமட்டுமே இருக்க, அப்பா மலையாளம் பயின்றவர், தமிழ் வழக்கு மொழியானதால் அதுவும் எழுத வாசிக்க தெரிந்தது அவருக்கு. கலைகளில், குறிப்பாக சங்கீதத்தில் ஈடுபாடுகொண்ட அவர் சின்ன வயதிலேயே பல மைல்கள் தொலைவிலுள்ள இரணியல் முத்தையா பாகவதரிடம் முறையாக சங்கீதம் பயின்றிருக்கிறார். இதுவே நாடக குழுக்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பளித்தது, மதுரை பாய்ஸ் கம்பனியிலும் சேர தூண்டியது. பிறகு பிரிட்டீஷ் சேனையில் சேர்ந்து ரங்கூன் வரைக்கும் போயிருக்கிறார்.
திரும்பி வந்தவர் குலத்தொழில் மீன்பிடித்தத்திலும்
ஈடுபபட்டிருக்கிறார். ஒரு முறை அவருடன் சென்றவர் கடலில் மூச்சுத்திணறி
இறக்கநேர்ந்ததும் இன்னொரு முறை அவரே வலையில் மாட்டிக்கொண்டும் உயிர்தப்பியதாலும்
மீன்பிடித்தத்துக்கே முற்றுப்புள்ளி வைத்து, மீன் வியாபாரம் தொடங்கியிருக்கிறார்.
இறாலுக்கு ஏற்றுமதி கிராக்கி ஏற்பட அந்த வியாபாரத்தில் முன்னோடியானார். வியாபாரம்
அதிகரிக்க ஒரு கணக்கப்பிள்ளையை ஏற்படுத்தும் கட்டாயம் வந்தது. அவரே பண மோசடியில்
ஈடுபட அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அந்த வேலை இடைநிலை மாணவனாகிய நான்
செய்யும் கட்டாயம் நேர்ந்தது. வாங்கும் விலையிலிருந்து ஒன்றிரண்டு மடங்கு அதிகமாக விற்று நிறைய இலாபம் பெற்றும்
அதை சேமிக்கவோ, நிலபுலன்கள் வாங்கி பத்திரப்படுத்தவோ முயற்சிக்காமல்
கைவிட்டுவிட்டோம்... (தொடரும்...)