Tuesday, December 24, 2019

தங்கைக்கு...


அன்பு தங்கை செல்வராணி
உனது உள்ளக் கவலைகளை, குமுறல்களை கொட்டி முடித்து இப்போது ஓரளவு நிம்மதியாயிருப்பாய் என எண்ணுகிறேன். ஆனால், இங்கு வந்த எனக்கும் ஏனோ எண்ண அலைகளின் தாக்கம், நமது சிறுவயது வாழ்க்கை என்னை ஆச்சரியத்திலும் கவலையிலும் ஆழ்த்தியது. நான் உன்னைத் தேடி வந்த அதே நாள் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் நமது பழைய கோயிலில் நான் ‘திருநிலை’ப்படுத்தப்பட்ட நாள்!

எனது சிறுவயதில் அம்மா அழுதபோது அழுததைத்தவிர இரண்டு வேளை அழுததாக ஞாபகம் இருக்கிறது, அவை இரண்டும் என் தங்கைக்காக: ஒன்று, ஒரு மழை நாளில், சேர்ந்தே கடுமையான காற்றும் வீச, உன்னை காணவில்லை. என் தங்கையை காணவில்லையே என்று அழுதேன். பிறகு, ஒருவேளை உன்னை நான் அடிக்க, அடுத்தநாள் நீ நோய்வாய்ப்பட, அன்றும் அழுதேன். இன்று அம்மா-அய்யா இல்லாத நிலையில், நம் உடன்பிறப்பும் தூரமாக இருக்கும் தருணத்தில், உன்னுடைய நிலையை எண்ணி வருந்துகிறேன்.

இன்று நீ எவ்வளவோ மாறிவிட்டாய், இல்லை நீ வளர வளர மாறியே வந்தாய். அன்றெல்லாம் உன்னை நெறிப்படுத்தும் அறிவோ, திறமையோ அம்மாவுக்கு இருக்கவில்லை; அப்படி இருந்தாலும் நீ கேட்கும் நிலையில் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். அய்யாவின் பொறுப்பற்ற இக்கட்டான நிலைகளிலும், வறுமையிலும்தான் அம்மா பொறுமையுடன் நம்மை வளர்த்தாள்.

உனக்கு திருமணமானபின் நல்ல ஒரு மனைவியாக வாழ்ந்த நீ எப்போது, எப்படி இன்றைய நிலைக்கு வந்தாய் என்று வியக்கிறேன். உனது கணவனுக்கு வந்த பின்னடைவின் பின், பிள்ளைகள் நால்வரையும் நீயே வளர்த்தாய், படிக்கவைத்தாய், நல்ல, அழகான, வசதியான ஒரு வீடு கட்டிமுடித்தாய், ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்துவைத்தாய், அவர்கள் பிள்ளைகளை வளர்த்தாய்... இதனால் உனக்கு வந்த சுமை, பளு கொஞ்சநஞ்சமல்ல; அவற்றையெல்லாம் வீரத்தோடு போராடியே சமாளித்தாய்... இதை கேள்வி கேட்க யாரால் இயலும்? அந்த வகையில் உன் கணவன் பொறுப்பற்றவனே. அதற்கும் மேல் உன்னை குறை கூறியிருக்கலாம், அவதூறு, பழிச்சொல் என பேசியிருக்கலாம், இப்போதும் சோம்பேறி போன்று நடக்கின்றான்... இது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எத்தனையோ தம்பதியர் தங்களது வாழ்க்கை துணை நோய்வாய்பட்டு படுத்த படுக்கையில் மலமூத்திரம் எடுத்தும், பரிபாலித்துமிருக்கிறார்கள். அவனை நியாயப்படுத்த இயலாது எனினும், அதற்காக அவனை கீழ்த்தரமாக பார்ப்பது, நடத்துவது எல்லாம் எந்த வகையில் சரியாகும்? இதனால் யாருக்கு என்ன லாபம்! உனது வீட்டிற்கு வந்த மருமகன்களுக்கு இது தரும் சேதிதான் என்ன! வேறு வழியில்லையெனில் அவனை பொருட்படுத்தாது வாழலாம். அதையெல்லாம் பிறர் தெரியவேண்டிய அவசியம்தான் என்ன! தன் பல்லை குத்தி பிறருக்கு நாற்றம் தரலாமா! நமது அழுக்குகளை பிறர்முன் சலவை செய்யலாமா! உனது நிலைப்பாடு எல்லாம் சரியென்றாலும் அவனிடம் காட்டும் பகைக்கும், வெறுப்புக்கும், கசப்புக்கும் என்னதான் காரணமோ! ஒன்றுமில்லை என்றாலும், உனக்கு கணவனாக, வாழ்க்கைத் துணையாக வேண்டாமென்றாலும் உன் பிள்ளைகளுக்கு அவன் தகப்பன் இல்லாமல் போவானா! அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா! அவர்கள் அவனை மதித்தால், பரிபாலித்தால், அதற்காக கோபப்படவோ, விரோதமாக இருக்கவோதான் முடியுமா, அது சரியா! அவர்களும் மனைவி மக்களோடு வாழும் பெரியவர்கள்தானே! ஒருவேளை, உனது மகன், கடைசிப்பையன், நீ வேண்டி, மன்றாடி பெற்றவன் உன்னிடம் காட்டும் இந்த பாராமுகத்துக்கு இதுவும் ஒரு காரணமாகலாமல்லவா!

உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் நிதானமாக, ஜெப உணர்வில் கடவுள் முன் சிந்தித்துப்பார். நீ ஏற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இல்லாமல் இருக்கலாம்; உன்னை அவன் வஞ்சித்திருக்கலாம், பொறுப்பற்றவனாக, சோம்பேறியாக, தன்மானம் இல்லாதவனாக அத்தனை குடும்ப பொறுப்பையும் உன்மேல்மட்டும் போட்டு கைகட்டி இருந்திருக்கலாம். இருந்தாலும் நீ தற்போது அவனை நடுத்தும் விதம் எந்த வகையில் நியாயம்? அது குடும்பத்துக்கு அழகா, உனக்குத்தான் மரியாதையா? எனவே, வேறு நல்ல வழி இல்லாததால் அவனை எந்த நிபந்தனையுமின்றி மன்னித்துவிடு. மன்னிப்புக்கு தகுதி பார்க்கக்கூடாது. தகுதிக்காக மன்னித்தால் அது மன்னிப்பேயல்ல.

நேற்று நீ கோயிலுக்கு போயிருந்தால், அன்றைய நற்செய்தி கேட்டிருப்பாய். ‘மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது... அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி... உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்... யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்...’ (மத்தேயு 1:18-20, 24). அன்றைய சூழலில் அது அவமானம், வஞ்சனை. இருத்தும் மரியாவை யோசேப்பு ஏற்றுக்கொள்ளவில்லையா? அவள் பிள்ளை இயேசுவை வளர்த்தவில்லையா? நேர்மையானவர், நீதிமான் என்றெல்லாம் அவர் போற்றப்படவில்லையா!

இன்னும் ‘ராணி இல்லம்’ உன் வீடு, நீ கட்டியது. உனது மகனுக்கு கொடுப்பதாக நீ சொல்லியிருக்கலாம், அதை வாக்குறுதியாகவே நீ பார்க்கலாம். இருந்தும் இப்போது நீ வெளியேற வேண்டிய அவசியம் என்ன? லாரன்சா? அவனாக வேறு எங்கேயும் போவான் என்று தோன்றவில்லை. அப்படியிருக்க எப்படி அவனை வெளியேற்றுவது? ‘மாற்றமுடிவதை மாற்றவும், அதற்கு மேலதை ஏற்கவும்’ என்றார்ப்போல் அவனை கண்டுகொள்ளாதே. ‘விருந்து புறத்திருக்க சாவா மருந்தெனினும் வேண்டர்ப்பாற்றன்று’ எனும் வள்ளுவர் வாக்கு இணங்க நீ உண்டால் அதன் ஒரு பாதியை அவனுக்கும் கொடு. கொடுப்பது எப்போதுமே நிறைந்தே, மரியாதையாகவே கொடுக்கவேண்டும். அதற்கு பலன், கைம்மாறு உனக்கு கிடைக்காமல் போகாது.

மேலும் நீ மனமெல்லாம் வெறுப்பாக, விரோதமாக, கசப்பாக இருப்பது உனது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதல்ல. அது மன அழுத்தத்தையே தரும். நமக்கு ஏன் இந்த வீண் விபரீதம் என்று அதை சரிக்கட்டு. பொறுத்து, மன்னித்து உனது நிம்மதியை தக்கவைத்துக்கொள். உனது பொறுமைக்கும், பாடுகளுக்கும் கடவுள் நிச்சயம் பரிசளிப்பார் என்பதை மறவாதே. ‘பொறுத்தவன் பூமியாள்வான் பொங்கினவன் காடாள்வான்’ என்றும் நினைவில்க்கொள்வோம்.

‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டும்’ நாம் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம், இழந்த உறவுகளை நிபந்தனைகளின்றி மீட்போம், நமது குடும்பத்தை காப்போம். நான் தவறு செய்தால், உனக்கு வேதனை தந்தால் அதை என்னிடம் சுட்டிக்காட்ட உனக்கு உரிமை இல்லையா? நாம் அண்ணன் தங்கை. அந்த உறவில் வந்தவன் லாரன்ஸ். உங்களிடையே ஆயிரம்தான் இருந்தாலும் நான் அதை பாராட்டலாமா, குறிப்பாக ஒரு பணியாளனாக தொண்டாற்றும் என்னைப்போன்ற ஒருவன். எனவே, உனது பிள்ளைகளை புரிந்துகொண்டு அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல் என்னையும் புரிந்துகொள்வாயல்லவா? உனது நலன் நாடி, அதற்காக வேண்டி முடிக்கிறேன். இறைஇயேசு உன்னுள்ளத்திலும் பிறக்கட்டும், அவர்தரும் சமாதானம் உனதாகட்டும், உலகம் அதை உணரட்டும்.
அன்புடன்,
அண்ணன் /24.12.2019.    


Wednesday, December 11, 2019

‘உயிர்கள் வாழ்வது சுவாசத்தால், கிறிஸ்தவர்கள் வாழ்வது விசுவாசத்தால்...’


எமது பங்கு பாதுகாவலி திருவிழா மாலை ஆராதனைக்கு மறையுரை:
St. Lucy’s, Erayumanthurai
Patroness’ Feast
Vespers – Homily –Thursday, 12th December 2019 at 6.00 pm
Gen 22:7-14; James 1:2-7; Mt 17:14-21
‘உயிர்கள் வாழ்வது சுவாசத்தால், கிறிஸ்தவர்கள் வாழ்வது விசுவாசத்தால்...’
முன்னுரை:
நாம் வாழும் பகுதி, மொழி-கலாச்சார அடிப்படையில், விசித்திரமான, வித்தியாசமான ஒன்று! மொழி அடிப்படையில் நாம் என்றுமே தமிழர்கள், பக்கத்து மலையாள தாக்கம் பாதித்த தமிழர்கள். வரலாறு நம்மை மலையாளம் பேசும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாகமாக்கியது. அப்படியிருக்க, நாம் முதலில் கொச்சி மறைமாவட்டத்திலும், தொடர்ந்து திருவனத்தபுரம் மறைமாவட்டத்தினுடனும் சேர்க்கப்பட்டோம். பிறகு மொழிவழியாக மாநிலங்கள் பிரக்கப்பட்டபோது நாளடைவில் தமிழ் நாடாகிய மெட்ராஸ் மாநிலத்துடன் சேர்க்கப்பட்டோம்.

நமது ஊரில் எனக்குமுன் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் பயின்றது மலையாளத்திலும், என்னுடன் அந்த பள்ளியில் தமிழ் வழியும் ஆரம்பமானது. நமது முந்திய அடையாளம் கிறிஸ்தவமாயிருக்க அதன் திருவனத்தபுரம் மறைமாவட்டவழிபாட்டு மொழி மலையாளமாகவும் தொடர்ந்தது. மேலும் நம் ஊர்களில் பணிக்காக வந்த பங்கு தந்தையர்களும் மலையாளிகளே, அல்லது தமிழ் பரிமாற்றம் செய்யத் தெரியாத ‘தமிழ்நாட்டுக்காரர்’களே! கேரளா தலைநகர் நமக்கு பக்கமென்பதாலும், நமது மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கேரளாவுக்கும், அதை தாண்டி மேற்கு கடற்கரைக்கும் செல்வதாலும் மலையாள மொழி-கலாச்சார ஈடுபாடுகள் அனிச்சையாக நம்மை தொற்றிக்கொண்டது.

என்னுடைய நிலையும் பரிதாபத்திற்குரியதே! பதினொன்றுவரை தமிழ் பயின்று, தமிழிலும் பயின்று, பிறகு குருமாணவனாக திருவனந்தபுரம் சென்று அன்றிலிருந்து இன்றுவரை மலையாளிகளோடு படித்து, பழகி, பணிசெய்து வாழ்ந்து வரும் என்னை தமிழ் மறையுரையாற்ற கூப்பிட்டால், அது பரிதாபம் என்றல்லாமல் வேறு என்ன சொல்வது!

நமது ஊர் மொழிவழக்கு பரவாயில்லை, ஆனால் சரியாக, சரமாரியாக சுத்த தமிழில் பேசும் திறமை இல்லை என்றே நினைக்கிறேன். பொறுத்துக்கொள்வீர்கள் எனில் முயற்சிக்கிறேன்.  

-           முதல் வாசகம்: ஈசாக்கை பலியிடுதல்...
o    நரபலி – கடவுள் கேட்டுக்கொண்டார் என்றால், அது ஒருவகை கட்டளை, நடைமுறை...
o    ‘அவன்மேல் கைவைக்காதே’ என்றால், நரபலி வேண்டாம், மிருகபலி போதும் என்றே பொருள்... அதுவும் அபிரகாமினுடைய விசுவாசத்திற்கு கைமாறாக! இன்று மிருகபலிகூட தடைசெய்யப்பட்டுவிட்டது...
o    தனது ஒரே பேறான மகனை பலிகொடுக்க, கடவுள் கற்றது ஆபிரகாமிடமிருந்தாகலாம்!
o    தெரியாத, தெளிவில்லாத ஒன்றை விசுவாசிக்கிறோம் என்றால், அடிப்படையில் அது நம்மை நாமே விசுவாசிக்கிறோம் என்றுதானே பொருள்படும்?
-           இரண்டாம் வாசகம்: ‘நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றி கேட்கவேண்டும்...’
o    நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்... எத்துணை உண்மை!
-           நற்செய்தி: பேய் பிடித்த சிறுவனை குணமாக்குதல்:
o    ‘நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?
§   அதாவது, நீங்களாகவே செய்யவேண்டியதுதானே? ஆனால், அதற்கு தேவை  நம்பிக்கை, அதாவது தன்னம்பிக்கை.
o    ‘உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் உங்களால் பேயை ஓட்ட இயலாமல் போனது...
§   ஆம், யானைக்கு பலம் தும்பிக்கையில் என்பதேபோல் நமக்கு அது நம்பிக்கையில்’
§   ‘உன்னால் முடியும் தம்பி’... ‘வானமே எல்லை!’
§   ‘முடியாது’ என்ற சொல்லை அகராதியிலிருந்து எடுத்துவிடுங்கள்’ பேரரசர் அலக்சாண்டர்
சுவாசம் – விசுவாசம்: (வேகம் – விவேகம்)
-           இந்த விசுவாசம் என்பது தன்னம்பிக்கையே...
o    அதுவே இன்றளவும் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிக்கும், காலத்தையும் இடத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, நமது அனைத்து நாகரிக, கலை, கலாச்சார, இலக்கிய, அறிவியல் வளர்சிகள் பெற மனிதனுக்கு துணை நின்றது...
o    இயற்கையை, அதன் சீற்றத்தை, காட்டு மிருகங்களை  கட்டுப்படுத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்குமுன் இந்த நம்பிக்கையே அவனுக்கு துணையாயிருந்தது...
-           எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, அனைத்தையும் அறியும் கடவுளை நம்புவதால் இலாபமின்றி நஷ்டமில்லாதிருக்கும்போது, நம்பிக்கை சுலபம்...
-           ஆனால், இயேசுவில் மனிதனான அந்த இறைவனே இன்றைய நற்செய்தியில் அவனையே, அவர்களையே நம்ப கேட்கிறான்...
-           மேலும், பிறரில் அவனைக் காண கேட்கிறான்...
o    நான் பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன்... இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் இதை செய்தபோது எனக்கே செய்தீர்கள்’
o    ‘கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தூர்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்...’
o    ‘சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?... நீர் யார்?... நீ துன்புறுத்தும் இயேசு நானே...’
கிறிஸ்தவர்கள்:
-           இயேசுகிறிஸ்து
o    ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்... (கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை)..
o    திருமுழுக்கு: ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்...
o    சீமோன் பேதுரு: ‘நீர் மேசியா, வாழும் கடவுளின் மகன்... தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம்...
o    தலைமைக் குரு: ‘நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?’
o    ‘நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்... அன்றைய, இன்றையும், என்றையுமான போதனை...
ஆக, விசுவாசம், நம்மை நாமே நம்புவதுதான், கூடவே பிறரையும் நம்புவது; மனிதனை, மனிதத்தை நம்புவது... மனிதமே தெய்வீகம், தெய்வம்...

கடைசியாக, நமது ஊரைப் பற்றி ஒருசில கவலைகள் பங்குவைக்கலாம் என நினைக்கிறேன். அதையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். நமது இந்த சின்ன கிராமம் பக்கத்து ஊர் நெரிசல்களை விட்டால் அமைதியான, அழகான ஓன்று; படிப்பிற்கும், விளையாட்டிற்கும் சளைக்காதவர்கள். இந்த அமைதி கிராமம் நாளடைவில் ஒருசில சுயநலக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்று நினைக்கிறேன். அதனால் அமைதி இழந்து, கடலரிப்பு மற்றும் இப்போதைய துறைமுக கட்டமைப்புக்களால் அதன் களையிழந்து காணப்படுகிறது.

இதை நமதருமை அழகு, அன்பு கிராமமாக்க நமது பிரிவினைகளை களைவோம், லூசியம்மாவின் அருமை செல்வங்களாக ஒன்றுபடுவோம், நமது தனிமனித, குடும்ப போட்டி பொறாமைகளை பங்கு பணிகளில், விசுவாச வாழ்க்கையில் திணிக்காமலிருப்போம். அதற்கு தலைமை தாங்கும் பங்கு பணியாளருடன் ஒத்துழைப்போம், இயேசுவின் இறையரசுக் கனவை இங்கு நனவாக்குவோம். நன்றி.