Tuesday, December 24, 2019

தங்கைக்கு...


அன்பு தங்கை செல்வராணி
உனது உள்ளக் கவலைகளை, குமுறல்களை கொட்டி முடித்து இப்போது ஓரளவு நிம்மதியாயிருப்பாய் என எண்ணுகிறேன். ஆனால், இங்கு வந்த எனக்கும் ஏனோ எண்ண அலைகளின் தாக்கம், நமது சிறுவயது வாழ்க்கை என்னை ஆச்சரியத்திலும் கவலையிலும் ஆழ்த்தியது. நான் உன்னைத் தேடி வந்த அதே நாள் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் நமது பழைய கோயிலில் நான் ‘திருநிலை’ப்படுத்தப்பட்ட நாள்!

எனது சிறுவயதில் அம்மா அழுதபோது அழுததைத்தவிர இரண்டு வேளை அழுததாக ஞாபகம் இருக்கிறது, அவை இரண்டும் என் தங்கைக்காக: ஒன்று, ஒரு மழை நாளில், சேர்ந்தே கடுமையான காற்றும் வீச, உன்னை காணவில்லை. என் தங்கையை காணவில்லையே என்று அழுதேன். பிறகு, ஒருவேளை உன்னை நான் அடிக்க, அடுத்தநாள் நீ நோய்வாய்ப்பட, அன்றும் அழுதேன். இன்று அம்மா-அய்யா இல்லாத நிலையில், நம் உடன்பிறப்பும் தூரமாக இருக்கும் தருணத்தில், உன்னுடைய நிலையை எண்ணி வருந்துகிறேன்.

இன்று நீ எவ்வளவோ மாறிவிட்டாய், இல்லை நீ வளர வளர மாறியே வந்தாய். அன்றெல்லாம் உன்னை நெறிப்படுத்தும் அறிவோ, திறமையோ அம்மாவுக்கு இருக்கவில்லை; அப்படி இருந்தாலும் நீ கேட்கும் நிலையில் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். அய்யாவின் பொறுப்பற்ற இக்கட்டான நிலைகளிலும், வறுமையிலும்தான் அம்மா பொறுமையுடன் நம்மை வளர்த்தாள்.

உனக்கு திருமணமானபின் நல்ல ஒரு மனைவியாக வாழ்ந்த நீ எப்போது, எப்படி இன்றைய நிலைக்கு வந்தாய் என்று வியக்கிறேன். உனது கணவனுக்கு வந்த பின்னடைவின் பின், பிள்ளைகள் நால்வரையும் நீயே வளர்த்தாய், படிக்கவைத்தாய், நல்ல, அழகான, வசதியான ஒரு வீடு கட்டிமுடித்தாய், ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்துவைத்தாய், அவர்கள் பிள்ளைகளை வளர்த்தாய்... இதனால் உனக்கு வந்த சுமை, பளு கொஞ்சநஞ்சமல்ல; அவற்றையெல்லாம் வீரத்தோடு போராடியே சமாளித்தாய்... இதை கேள்வி கேட்க யாரால் இயலும்? அந்த வகையில் உன் கணவன் பொறுப்பற்றவனே. அதற்கும் மேல் உன்னை குறை கூறியிருக்கலாம், அவதூறு, பழிச்சொல் என பேசியிருக்கலாம், இப்போதும் சோம்பேறி போன்று நடக்கின்றான்... இது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எத்தனையோ தம்பதியர் தங்களது வாழ்க்கை துணை நோய்வாய்பட்டு படுத்த படுக்கையில் மலமூத்திரம் எடுத்தும், பரிபாலித்துமிருக்கிறார்கள். அவனை நியாயப்படுத்த இயலாது எனினும், அதற்காக அவனை கீழ்த்தரமாக பார்ப்பது, நடத்துவது எல்லாம் எந்த வகையில் சரியாகும்? இதனால் யாருக்கு என்ன லாபம்! உனது வீட்டிற்கு வந்த மருமகன்களுக்கு இது தரும் சேதிதான் என்ன! வேறு வழியில்லையெனில் அவனை பொருட்படுத்தாது வாழலாம். அதையெல்லாம் பிறர் தெரியவேண்டிய அவசியம்தான் என்ன! தன் பல்லை குத்தி பிறருக்கு நாற்றம் தரலாமா! நமது அழுக்குகளை பிறர்முன் சலவை செய்யலாமா! உனது நிலைப்பாடு எல்லாம் சரியென்றாலும் அவனிடம் காட்டும் பகைக்கும், வெறுப்புக்கும், கசப்புக்கும் என்னதான் காரணமோ! ஒன்றுமில்லை என்றாலும், உனக்கு கணவனாக, வாழ்க்கைத் துணையாக வேண்டாமென்றாலும் உன் பிள்ளைகளுக்கு அவன் தகப்பன் இல்லாமல் போவானா! அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா! அவர்கள் அவனை மதித்தால், பரிபாலித்தால், அதற்காக கோபப்படவோ, விரோதமாக இருக்கவோதான் முடியுமா, அது சரியா! அவர்களும் மனைவி மக்களோடு வாழும் பெரியவர்கள்தானே! ஒருவேளை, உனது மகன், கடைசிப்பையன், நீ வேண்டி, மன்றாடி பெற்றவன் உன்னிடம் காட்டும் இந்த பாராமுகத்துக்கு இதுவும் ஒரு காரணமாகலாமல்லவா!

உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் நிதானமாக, ஜெப உணர்வில் கடவுள் முன் சிந்தித்துப்பார். நீ ஏற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இல்லாமல் இருக்கலாம்; உன்னை அவன் வஞ்சித்திருக்கலாம், பொறுப்பற்றவனாக, சோம்பேறியாக, தன்மானம் இல்லாதவனாக அத்தனை குடும்ப பொறுப்பையும் உன்மேல்மட்டும் போட்டு கைகட்டி இருந்திருக்கலாம். இருந்தாலும் நீ தற்போது அவனை நடுத்தும் விதம் எந்த வகையில் நியாயம்? அது குடும்பத்துக்கு அழகா, உனக்குத்தான் மரியாதையா? எனவே, வேறு நல்ல வழி இல்லாததால் அவனை எந்த நிபந்தனையுமின்றி மன்னித்துவிடு. மன்னிப்புக்கு தகுதி பார்க்கக்கூடாது. தகுதிக்காக மன்னித்தால் அது மன்னிப்பேயல்ல.

நேற்று நீ கோயிலுக்கு போயிருந்தால், அன்றைய நற்செய்தி கேட்டிருப்பாய். ‘மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது... அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி... உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்... யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்...’ (மத்தேயு 1:18-20, 24). அன்றைய சூழலில் அது அவமானம், வஞ்சனை. இருத்தும் மரியாவை யோசேப்பு ஏற்றுக்கொள்ளவில்லையா? அவள் பிள்ளை இயேசுவை வளர்த்தவில்லையா? நேர்மையானவர், நீதிமான் என்றெல்லாம் அவர் போற்றப்படவில்லையா!

இன்னும் ‘ராணி இல்லம்’ உன் வீடு, நீ கட்டியது. உனது மகனுக்கு கொடுப்பதாக நீ சொல்லியிருக்கலாம், அதை வாக்குறுதியாகவே நீ பார்க்கலாம். இருந்தும் இப்போது நீ வெளியேற வேண்டிய அவசியம் என்ன? லாரன்சா? அவனாக வேறு எங்கேயும் போவான் என்று தோன்றவில்லை. அப்படியிருக்க எப்படி அவனை வெளியேற்றுவது? ‘மாற்றமுடிவதை மாற்றவும், அதற்கு மேலதை ஏற்கவும்’ என்றார்ப்போல் அவனை கண்டுகொள்ளாதே. ‘விருந்து புறத்திருக்க சாவா மருந்தெனினும் வேண்டர்ப்பாற்றன்று’ எனும் வள்ளுவர் வாக்கு இணங்க நீ உண்டால் அதன் ஒரு பாதியை அவனுக்கும் கொடு. கொடுப்பது எப்போதுமே நிறைந்தே, மரியாதையாகவே கொடுக்கவேண்டும். அதற்கு பலன், கைம்மாறு உனக்கு கிடைக்காமல் போகாது.

மேலும் நீ மனமெல்லாம் வெறுப்பாக, விரோதமாக, கசப்பாக இருப்பது உனது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதல்ல. அது மன அழுத்தத்தையே தரும். நமக்கு ஏன் இந்த வீண் விபரீதம் என்று அதை சரிக்கட்டு. பொறுத்து, மன்னித்து உனது நிம்மதியை தக்கவைத்துக்கொள். உனது பொறுமைக்கும், பாடுகளுக்கும் கடவுள் நிச்சயம் பரிசளிப்பார் என்பதை மறவாதே. ‘பொறுத்தவன் பூமியாள்வான் பொங்கினவன் காடாள்வான்’ என்றும் நினைவில்க்கொள்வோம்.

‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டும்’ நாம் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம், இழந்த உறவுகளை நிபந்தனைகளின்றி மீட்போம், நமது குடும்பத்தை காப்போம். நான் தவறு செய்தால், உனக்கு வேதனை தந்தால் அதை என்னிடம் சுட்டிக்காட்ட உனக்கு உரிமை இல்லையா? நாம் அண்ணன் தங்கை. அந்த உறவில் வந்தவன் லாரன்ஸ். உங்களிடையே ஆயிரம்தான் இருந்தாலும் நான் அதை பாராட்டலாமா, குறிப்பாக ஒரு பணியாளனாக தொண்டாற்றும் என்னைப்போன்ற ஒருவன். எனவே, உனது பிள்ளைகளை புரிந்துகொண்டு அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல் என்னையும் புரிந்துகொள்வாயல்லவா? உனது நலன் நாடி, அதற்காக வேண்டி முடிக்கிறேன். இறைஇயேசு உன்னுள்ளத்திலும் பிறக்கட்டும், அவர்தரும் சமாதானம் உனதாகட்டும், உலகம் அதை உணரட்டும்.
அன்புடன்,
அண்ணன் /24.12.2019.    


No comments: