Thursday, October 8, 2020

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்...

 பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !

29 வயதில் 17 வேலைகள் பார்த்து கவிஞரானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! - நினைவுதின சிறப்புப் பகிர்வு 


'வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே!' - 


திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாள்  இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம்  என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 


வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.


பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.


தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.         


உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:  


பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு 

பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!    

(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)


எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்: 


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி

தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்

திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார். 


ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம். 


தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.


எம்.எஸ்.விஸ்வநாதனை தூங்கவிடாமல் செய்த பட்டுக்கோட்டையாரின் வரிகள் இவைதான்!


சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரமற்ற அற்புதன்,  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..


அவர் இல்லாமல் தமிழ் பாடல்களே இல்லை.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா.”

“காடு வௌஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”

“வசதி படைச்சவன் தரமாட்டான்

வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"

என்று எழுதப்படிக்கத் தெரியாத தமிழ்நாட்டின் கடைகோடி தமிழனுக்கும்  பொதுவுடைமை  போதித்த பட்டுக்கோட்டை  படித்ததோ இரண்டாம்வகுப்பு. வறுமையின் காரணமாக விவசாயம் பார்த்திருக்கிறார், மாடுமேய்த்திருக்கிறார், மீன் விற்றிருக்கிறார் இப்படி அவர் செய்யாத தொழில்கள் இல்லை. கல்யாணசுந்தரத்தின் அப்பா பொதுவுடமை சிந்தனை கொண்டவர். பொதுவுடமை சிந்தனை நிறைந்த குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்ததால் அவரால் தொழிலாளர்களின் வலியை, கோபத்தை, நியாயத்தை, மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிந்தது. ஆயிரமாயிரம் காலத்துக்கும் தேவையான சிந்தனைகளை  சினிமா பாடல்களின் மெட்டுக்குள் அடக்கிய அவரின் திறன் இன்றுவரை யாருக்கும் கை வரவில்லை  என்று அடித்துச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் ஏழைகளின் நாயகன் ஆனதற்கும் தமிழகத்தின் முதலமைச்சரானதற்கும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் மிகப்பெரிய காரணம். என்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார்.

சினிமாவுக்குள் நுழைவது இன்றுபோல் அன்று எளிதானது அல்ல. பட்டுக்கோட்டை சினிமா ஆசையில் சென்னை வந்து நாடகத்துக்குத்தான் முதன்முதலில் பாட்டெழுதினார். நாடகத்திலேயே அவர் பொதுவுடமை வேட்கை ஆரம்பமாகிவிட்டது.

“தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனால்,

மக்கள் வயிறு காயுது...”

என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகுதான் பாண்டிச்சேரியில் இருந்த பாரதிதாசனிடம் சிஷ்யனாகும் வாய்ப்பு பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்தது. எழுத்தில் ஆற்றல் பெற்றிருந்தாலும் பாரதிதாசனிடம் நேரடியாக தன் கவிதைகளை காட்ட பட்டுக்கோட்டையாருக்கு பயம். `அகல்யா' என்றபெயரில் எழுதிகாட்டியிருக்கிறார். கவிதைகளை படித்து பாரதிதாசன் பாராட்டிய பிறகே, அது தன் கவிதைகள் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுதான்  பாரதிதாசன்மேல் பட்டுக்கோட்டையார் கொண்டிருந்த பிரமிப்புக்கான அடையாளம்.


பட்டுக்கோட்டை சினிமாவுக்கு வந்த நேரத்தில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படப்பாடல்களில் கோலோச்சிக்கொண்டிருந்தனர்.  அந்த மலைகளுக்கு இடையில் மடுவாக நுழைந்த பட்டுக்கோட்டை, அடுத்த சில ஆண்டுகளில் அத்தனை ஜாம்பவான்களும் தன் நடையைப் பின்தொடரும் அளவுக்கு கூர்மையான வார்த்தைகளைக் கொண்டு பாடல் செய்தார். முதலாளிகளையும் அடிமைத் தனத்தையும் வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்.

சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது பல இடங்களில் பட்டுக்கோட்டையை பார்க்காமலேயே விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தால் கோபத்துக்குள்ளான பட்டுக்கோட்டை அந்த நிமிடத்தில் எழுதிய வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை பலநாட்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த சமயத்தில் அவரிடம் பாட்டெழுத வாய்ப்பு கேட்டு  சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை.  `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒருத்தர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்' என்று மேனேஜர் மூலம் எம்.எஸ்.விக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது, “நமக்கு நாள்கள் குறைவாகத்தான் இருக்கிறது. புது ஆட்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுதச்சொல்லுங்க" என்று கோபமாக சொல்லி மேனேஜரை துரத்திவிட்டிருக்கிறார். அதே வேகத்தில் வந்து, "புது ஆட்களைப்பார்க்கும் எண்ணம் இப்போது இல்லையாம்"  என்று எம்.எஸ்.வி மேனேஜர் பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல...

“என்னைப்பார்க்க வேண்டாம். என் கவிதையை படிக்கச் சொல்லுங்கள்” என்று தன்னுடைய கவிதையை கொடுத்திருக்கிறார். மேனேஜரும் `இவன் புது டைப்பா இருப்பான் போலிருக்கே' என்று யோசித்துக்கொண்டு. எம்.எஸ்.வியிடம் போயிருக்கிறார். "அய்யா... நீங்கள் கவிஞனை பார்க்க வேணாடாமாம்.  அவரது கவிதையை படித்தால் போதுமாம்" என்று மேனேஜர் நீட்டிய தாளில்,

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை படித்த எம்.எஸ்.வி நெகிழ்ந்து போயிருக்கிறார்.   அந்த சம்பவத்தைப் பற்றி பின்னாட்களில், “அன்றைய தினம் சாப்பிடக்கூட முடியவில்லை. பூஜை அறையிலேயே கிடந்தேன்.  விஸ்வநாதா... அதற்குள் என்னடா   அகந்தை.? நீ.. என்ன அவ்வளோ பெரிய ஆளா" என்று எனக்குள் நானே வருந்தினேன். எவ்வளவு பெரிய திறைமைசாலியை நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்று அன்று முழுக்க  கடவுளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டே இருந்தேன் ” என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு,  பட்டுக்கோட்டை எழுதிய ஒவ்வொரு பாட்டும்   இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்கான பாடம்.

“முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் இன்பம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் ”

பட்டுக்கோட்டையின் இந்த வரிகளை வியந்து, `அடேயப்பா.. நான் மேடையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... சட்டசபையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... பள்ளியில் பொதுவுடமை கேட்டிருக்கிறேன்...  பள்ளியறையில் பொதுவுடமை சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்'  என்று  ஒரு மேடையில் வைரமுத்து சிலாகித்தது நினைவுக்கு வருகிறது. ஆம், அவர் காதலில்கூட பொதுவுடை சிந்தனை நிறைந்திருந்தது என்பதன் வெளிப்பாடு அது.  அன்றைக்கு தனது ஒவ்வொரு பாடல்களிலும்  சமூக அவலத்தை எதிர்த்து எழுதிய பட்டுக்கோட்டையும்   பாடல் ஆசிரியர்தான். இன்றைக்கு மலிந்துகிடக்கும்  அவலங்களை  ஆராதித்து எழுதுகிறவர்களும் பாடல் ஆசிரியர்கள்தான் என்றால் சிரிப்புதான் வருகிறது.  

பட்டுக்கோட்டை அதற்கும் ஒரு பாடல் வைத்திருக்கிறார். 

"சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"


''காடுவௌஞ்சென்ன மச்சான்

நமக்குக் கையும்காலும்தானே மிச்சம்''

என்று கவலைகொண்டதோடு...

''நம்ம நாட்டுக்குப் பொருத்தம் 

நாமே நடத்தும் 

கூட்டுப்பண்ணை விவசாயம்''


என்று விவசாய முறைகளில் நாம் எதைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டி,

''தைபொறந்தா வழிபொறக்கும் தங்கமே தங்கம்''

என்று நம்பிக்கையும் விதைத்திருக்கின்றன இவரின் பாடல்கள்.

இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டதுமே பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள்தாம் பொதுவாக நினைவுக்கு வருவார்கள். ஆனால், அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு எப்போதுமே முன்னே நிற்கும் புரட்சிக் கவிஞன்... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அக்டோபர் 8, அந்தப் புரட்சிக்காரருக்கு நினைவுநாள். ஆம், அற்புதமான, ஆழ்ந்த கருத்துகளுக்குச் சொந்தக்கவி அவர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் பிறந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலமும் கவிபாடும் திறன்பெற்றவர். அண்ணன் கணபதியோடு உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த கல்யாணசுந்தரம், இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை. அண்ணனிடமே அடிப்படைக் கல்விகளைக் கற்றுக்கொண்டார். 

வளர்ந்த பிறகு, திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும், விவசாயச் சங்கங்களிலும் ஈடுபாடுகொண்ட கல்யாணசுந்தரம், தமிழ்மீது கொண்ட காதலால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனிடம் தமிழ்ப் பயின்றார். பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலும் சிலகாலம் பணிபுரிந்தார். இளம்வயதில் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நடிகர் டி.எஸ்.துரைராஜ் உதவியால் சக்தி நாடக சபாவில் இணைந்தார். அப்படியே திரையுலகிலும் கால்வைத்தார். ஆறடி உயரம் கொண்ட ஆஜானபாகுவான கல்யாணசுந்தரம், 1951ல் ‘ராஜகுரு’ கதாபாத்திரத்தில் ‘கவியின் கனவு’ எனும் தமிழ் நாடகத்தில் நடித்தார்.

1953-ல் சக்தி நாடக சபா மூடப்பட்டதால் ‘சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து நடித்தவர், நாடகங்களுக்குப் பாடல்களும் எழுதினார். சினிமா பாடலாசிரியராக அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக உழைத்தார். வாழ்க்கையில் தான் படித்த கடினமான பாடங்களையும் தான்பெற்ற பற்பல அனுபவங்களையும்தாம் அதிகமாகத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், இவரின் நெருங்கிய நண்பர். 1954-ம் ஆண்டில் ஜீவானந்தம் உதவியால் கம்யூனிஸ்ட் பத்திரிகையான ‘ஜனசக்தியில் தன்னுடைய கவிதைகளை வெளியிட்டார் கல்யாணசுந்தரம்.

1954-ம் ஆண்டுக்குப்பின் முழுநேர பாடலாசிரியராக சினிமாவில் தன் பணியைத் தொடர்ந்தார். முதல் பாடலை ‘படித்த பெண்’ என்னும் தமிழ்ப் படத்துக்காக எழுதினார். இத்திரைப்படம் 1956-ல் வெளியானது. அதேஆண்டில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘பாசவலை’ திரைப்படம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பிரபலப்படுத்தியது. பல வெற்றிப் பாடல்களை சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்காக எழுதினார். இவர் எழுதிய பாடல்கள் பலவும்தாம், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமாக அமைந்தன. கிட்டத்தட்ட 189 படங்களுக்குப் பாட்டு எழுதியிருக்கிறார் கல்யாணசுந்தரம். இவரின் பாடல்கள் தற்போது நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

கல்யாணசுந்தரத்தின் மனைவி பெயர் கௌரவாம்பாள். 1959-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டில்தான் (08.10.1959) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென மரணமடைந்தார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன், பிரமிப்புடன், பொறாமையுடன், நம்பிக்கையுடன்... பலராலும் பார்க்கப்பட்ட கல்யாணசுந்தரம், தன்னுடைய 29 வயதிலேயே மறைந்தது, பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய 29 ஆண்டுகால வாழ்க்கையில் விவசாயி, மாடுமேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு, கடைசியில் கவிஞராக உருவெடுத்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கல்யாணசுந்தரம்.

அவரின் பாடல்களில் இருக்கும் வரிகள் வெறுமனே காசுக்காகப் படைக்கப்பட்டவையல்ல. ஒவ்வொன்றும் அவருடைய இயல்பான வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவைதாம். இதற்கு உதாரணமாகப் பலரும் சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்...

சினிமா கம்பெனிக்குப் பாட்டெழுதிக் கொடுத்தவகையில் பணம் வந்து சேரவில்லை. அதைக் கேட்க படத்தயாரிப்பாளரைத் தேடிப்போனார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது. பணத்தை வாங்காமல் இங்கிருந்து நகரக் கூடாது என்கிற உறுதியுடன் அங்கேயே நின்றார் கல்யாணசுந்தரம். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் படத்தயாரிப்பாளர்.

ஒரு தாளை எடுத்து அதில் சில வரிகள் எழுதி, அந்தத் தயாரிப்பாளரின் மேஜைமீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் கல்யாணசுந்தரம். என்ன ஆச்சர்யம்... படக்கம்பெனியைச் சேர்ந்த ஓர் ஆள் அலறியடித்துக்கொண்டு அடுத்த சில மணி நேரங்களில் 


கல்யாணசுந்தரத்திடம் ஓடிவந்து பணத்தைக் கொடுத்தார். 

‘தாயால் வளர்ந்தேன்; 

தமிழால் அறிவு பெற்றேன்; 

நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; 

நீ யார் என்னை நில் என்று சொல்ல?’

இதுதான் அந்தத் தாளில் கல்யாணசுந்தரம் எழுதியிருந்த வரிகள்!

பாட்டுக்கோட்டை, மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டையார் என்றெல்லாம் தமிழகத்தில் பலருடைய மனங்களிலும் தமிழக வரலாற்றிலும் பதிந்துகிடக்கிறான் இந்தப் புரட்சிக் கவிஞன்!

நன்றி- மலைச்சாமி சின்னா

No comments: