Wednesday, March 5, 2025

தங்கை...

 

10.05.2022:

அண்ணன் ஒருவன் இருந்தான்

அவனுக்கு தம்பிக்குப் பிறகு

தங்கை ஒருத்தியும்...

பாமரத்தாயும் பகுத்தறிவு தந்தையும்

பிள்ளைகள் மூவரையும் படிக்க வைத்தனர்

வயதில் குறைந்த அவள்

படிப்பிலும் குறையுடன் நின்றாள்

பேச்சுத் திறமையால் – ஆனால்

அனைவரையும் ‘வென்றாள்’!

 

அண்ணன் அவன் இவளை நினைத்து

கனவுகள் பல கண்டான்

கவிதைகள் சில வடித்தான்

அவையில் ஓரிரு இதோ...

 

‘அண்ணன் எந்தன் கோவிலிலே

அணையாத தீபம் என் தங்கை

அந்த தீபத்தை ஏற்றி வைப்பேன்

எழிலுடனே விளங்கச் செய்வேன்.

     எனக்கென்று வாழ்வில்லை – என்

     தங்கைக்காக வாழ்கின்றேன்

     அவள் வாழ்வை வளமாக்க

     கற்பனையில் மிதக்கின்றேன்.

கற்பனையில் கண்டவைகள் – தங்கைக்கு

காரியமாய் நடக்க வேண்டும்

காலமெல்லாம் அதற்காக

கழிந்தாலும் கவலையில்லை

     வரன் பெற்று வளமும் பெற்று – அவள்

      வாழ்வெல்லாம் களிக்க வேண்டும்

      மக்கள் பெற்று மனம் நிறைந்து

      மகராணியாய் விளங்க வேண்டும்.’

-    27.02.1980

‘தமிழுக்கே தலைமையிடம் – என்

தங்கைக்கோ தனி ஓரிடம்

தமிழுக்குத் தரமறுத்த தனியிடத்தை

தங்கைக்கு தந்துவிட்டேன் என்னிதயத்திலே.

     தமிழ் பிறந்து தரணியெலாம் தழைத்திருக்க – என்

      தங்கை மட்டும் ஏன் இன்னும் தழைக்கவில்லை

     அவள் தழைக்க தலைமையிடந்தாம் வேண்டின்

     அளித்திடுவேன் அந்தயிடம் தங்கைக்கின்று.

உனக்கென்று வாழ்த்தெழுத நினைக்கும்போது

கவிதை ஊற்று பெருக்கெடுத்து பாய்கின்றதே

அக்கவிதையினால் அபிஷேகம் செய்துன்னை

மகிழச்செய்வேன் உன் பிறந்த நாளின்று.

     பணமல்ல, பரிசல்ல, பாசம் மட்டும் போதுமென்றாய்

      பாசத்தை பாய்ச்சிடுவேன் உன் உளவயலில்

      பயிராக விளைந்திடும் பண்பை நானே

      பலர்காண பார்புகழப் பறித்திடுவேன்.  

o   05.06.1982

      

இத்தகை கனவுகளும் கற்பனைகளும் கலையலாம், ஆனால் யாருக்காக ஒருவன் அவற்றை கற்பனை செய்தானோ, கனவு கண்டானோ கட்டிக்காத்து நனவாக்க உடன் நின்றானோ அவரே தெரிந்து அதை கலைத்து கனவு கண்டவனை ‘கேணையன்’ ஆக பார்ப்பது என்னே வியப்பு, விபரீதம், அது நிறைவேற கை கொடுத்தவர்கள், ஏணியாக நின்று ஏற உதவியவர்களை எட்டி உதைப்பது போன்று நடத்துவது மனிதத்துக்கு மேன்மையா, பெண்மைக்கு பெருமையா, தாய்மைக்கு தகுந்ததா!!!

எதோ ‘தன்னிறைவு’ என்று மார் தட்டி பிறர் யாரையும் மதிக்காமல், பிள்ளைகளையும் பொருட்படுத்தாமல், அவர்கள் பிள்ளைகளுக்கும்கூட துர்மாதிரிகையாவோருக்கு ‘ஐயோ, கேடு’ எனும் மத்தேயு (18:6-9) வசனம் எச்சரிக்கையாகட்டும்...

வாழ்க்கை நிலையானது அல்ல, வசதியும், செல்வமும், ஆரோக்கியமும்கூட... பணம் போனால் சம்பாதிக்கலாம், ஆரோக்கியம் கூட சிகிச்சையினால் ஓரளவு திரும்ப பெறலாம், பண்பு இழந்தால்...! விரோதம் இல்லையென்றால், வசதிப்பட்டால் வேதாகமத்தில் ‘சபை உரையாளர்’ நூலை வாசி, ‘நீதி மொழிகளை’யும், மத்தேயுவையும் குறிப்பாக ‘மலைப்பொழிவு’ (அதிகாரம் 5 முதல் 8 முடிய) படி...  ‘நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையை கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய், உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய், வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என உறுதியாக உனக்கு சொல்கிறேன்’ (யோவான் 21:18-19) என்று இயேசு பேதுருவிடம் சொன்னது வயதாகும் உனக்கும் எனக்கும் சேர்த்துதான் என மறக்க வேண்டாம்...

No comments: