Sunday, August 19, 2018

‘இளையோரின் பார்வையில்... வறியவரை தூக்கிவிட’:


தூய விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை
5 - ம் திருவிழா - வெள்ளி - 10.08.2018 – 7 pm/(4—வது அன்பியம் &உள்நாட்டு மீனவர் சங்கம்-பெண்கள்)
‘இவ்வுலகம் மீட்பு பெற (இறையரசாகிட), அதனை புரட்டிப்போட்ட முப்பத்துமூன்று வயது இளைஞனின் இறையரசு பணியில் முழுமையாய் இணைத்துக்கொண்ட மரியாளின் விண்ணேற்பு விழாவோடு அவளது புரட்சி பாடலை தியானித்து கொண்டாடுகிறோம்...’ (அழைப்பிதழ்)

[‘பேசத்தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு. அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.’ (நீதிமொழி 31:8-9)/ ‘... நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை, ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர்... ஆகியவற்றோடும் போராடுகிறோம்.’(எபேசியர் 6:10-12)/ ‘மக்கள் பார்க்கவேண்டுமென்று... அறச்செயல்களைச் செய்யாதீர்கள்... மக்கள் புகழவேண்டுமென்றும் செய்யாதீர்கள்....(மத்தேயு 6:1-4)]தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்...’

மையக்கருத்து: ‘இளையோரின் பார்வையில்... வறியவரை தூக்கிவிட’:

வறியவரேதான் இறைவனின் எப்போதையும் கவலையும். ஆக அவர்கள்பால் அவர் எப்போதும் பரிவு காட்டுகிறார், பாசம் காட்டுகிறார். இதையே வேதாகமம் முழுக்க முழுக்க சொல்லிவைக்கிறது, குறிப்பாக இறைவாக்கினர்கள் (எசாயா 1:11ff, ஆமோஸ் 5:21ff); இயேசுவும் தமது இறையரசின் உவமைகள் வாயிலாக நமக்கு சொல்லிவைப்பதும். [எ.க: ‘...பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவுகொண்டார்... உடல்நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்... அவர்களுக்கு உணவு கொடுங்கள்... அனைவரும் வயிறார உண்டனர்...’ (Mt 14:14ff) ...திரண்டிருந்த மக்களை கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்...’(Mt 9:36ff; Mk 6:34) நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாட்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கு இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்.’(Mk 8:2ff) இயேசு அவர் (தொழுநோயாளர்)மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்... நோய் நீங்குக...’ என்றார். (Mk 1:40ff). நயீன் ஊர் கைம்பெண்ணின் இறந்த மகனை தூக்கி வருவதைக் கண்டு அவளிடம் பரிவு கொண்டு, ‘அழாதீர்’ என்றார். பின் பாடையை தொட்டு அவனை உயிர்ப்பித்து தாயிடம் ஒப்படைத்தார்.(Lk 7:11ff). பார்வையற்ற இருவர் வழியோரத்திலிருந்து, ‘ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்’ என, அவர்கள்மீது பரிவு கொண்டு அவர்கள் விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று அவரைப் பின்பற்றினார்கள். (Mt 20:29ff).

இதே பரிவை தனது நல்ல சமாரியர் மற்றும் காணாமற்போன மகன் உவமைகள் வாயிலாகவும் விளக்குகிறார்.(Lk10:33; 15:20).  துன்பத்துக்கு, வேதனைக்கு இயேசு தரும் பதில் இந்த பரிவும் தொடர்ந்து விடுதலைக்கு அவர்களை தூக்கிவிடுவதுமே. இதையே ‘காணாமற்போன ஆடு(Lk 15:1ff) மற்றும் திராக்மா/நாணயம்(Lk 15: 8ff)  முதலிய உவமைகளிலும் காண்கிறோம்.

இயேசுவின் நாசரேத் முழக்கம்: ‘ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.’(Lk 4:18-19)

பழைய ஏற்பாடு: ‘உன் சகோதரன் ஆபேல் எங்கே?... அவன் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கி கதறிக்கொண்டிருக்கிறது...’ (Gen 4:8ff)எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே... அவர்களை விடுவிக்கவும்...பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு.. அவர்களை நடத்திச்செல்லவும் இறங்கி வந்துள்ளேன்... எனவே இப்போதே போ... என் மக்களை நடத்திச்செல்ல நான் உன்னை அனுப்புகிறேன்...  (Ex 3:7-10)

இயேசு: யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றிருக்கலாம், அவரும் திருமுழுக்கு கொடுத்திருக்கலாம் (Jn 3:22-26), (அவரல்ல திருமுழுக்கு கொடுத்தது, மாறாக அவர் சீடரே Jn 4:3). திருமுழுக்கு கொடுப்பதைவிட ஏழைகளது துயர் துடைக்க வேண்டும் என்றே  பணி தொடங்குகின்றார். வறியவர்/எழைகள் என்றால் குருடர், உடல் ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், பசித்தோர், பாவிகள், விலைமாதர், வரிதண்டுவோர், தீய ஆவியால் துன்புறுவோர், அடக்குமுறைகளுக்கு உள்ளானோர், கைதிகள், வருந்தி சுமை சுமப்போர், சட்டம் தெரியாத பாமரர்கள், மக்கள்திரள், கடைசியானோர், குழைந்தைகள் என அத்தனைபேரும் வறியவர்/எழைகளே... இவர்களையே பரிசேயர்கள் பாவிகள் என்று அவமதித்தது...

வரலாறு என்பது முக்கிய புள்ளிகளுடையது, பிர்முகர்களுடையது! அரசர்கள், அரசகுமாரர்கள், வலுவுடையோர், செல்வந்தர்கள், அவர்கள் நடத்தும் சுரண்டல்கள், மேற்கொள்ளும் படையெடுப்புக்கள் என பல. ஆனால் உண்மை வரலாறு வேதனையின், துயரங்களின் அதற்கெதிரான போராட்டங்களின் வரலாறு என்று ஜொஹான் பி மெட்ஸ் எனும் எழுத்தாளர் கூறுகிறார். இவையொன்றும் வரலாற்று புத்தகங்களில் காண்பதில்லை. எடுத்துக்காட்டாக கலிங்கத்து போரில் இறந்தவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்? குருதிக்களத்தில் இறப்பவர்களல்ல, அவர்களது சொந்தங்களுமல்ல வெற்றி வாகை சூடுவதும் கொண்டாடுவதும்! ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் வென்றான்’ என்றால் சோழனென்றே நாம் நினைப்போம், ஆனால் உண்மையில் அந்த போர் வென்றது யார்? சாதாரண, ஊர், பேர் தெரியாத போராளிகள் மட்டும், ஒருவேளை அரசன் அந்தப் போர்க்களத்தில் வந்திருக்கவேமாட்டான். இதுதான் பெரிய கோயில்கள், அரண்மனைகள் என அனைத்து கட்டுமானங்கள், அமைப்புக்களின் வரலாறும். தஞ்சை பெரியகோயில், தாஜ் மஹால்  கட்டிய கட்டிடக்கலைஞர் யாரையேனும் பற்றியோ பணிசெய்த பணியாளர்பற்றியோ யாதேனும் சொல்லப்பட்டதா? இது அரசர்கள் முறை என்றால், இயேசுவின் முறை முற்றிலும் வேறு. இந்த ஏழை, பாமர மக்களைத் தவிர்த்து அவரை புரிந்துகொள்ளவே முடியாது. அவர்கள்தான் அன்னை மரியாளின் பாடலில் சொல்லும் ‘கடவுளுக்கு அஞ்சி நடப்போர்’, ‘தாழ்நிலையில் இருப்போர் (வறியவர்)’, ‘பசித்தோர்’ என்போர்.    

இத்தகையோரை சாதாரணமாக வேலைக்கு யாரும் எடுப்பதில்லை, யாரும் ஆதரிப்பதுமில்லை. இவர்களை பராமரிக்க முதியோர் இல்லம், அகதிகள் இல்லம் போன்ற ஒன்றும் அந்த காலத்தில் இல்லை. ஆக, உயிர்வாழ பிச்சை எடுப்பதை தவிர வேறு வழியில்லாதவர்கள். இவர்களுக்கு புறம்பே விதவைகள், அனாதைகள், பாமரர்கள், பாவிகள் என வேறொரு கூட்டமும். இத்தகையோருக்கு ஒருவேளை பசிபோக்க உணவுகூட கிடைக்கலாம், ஆனால் இவர்கள் அனுபவிக்கும் அவமானம், வெட்கம் (Lk 16:3) சொல்லற்கரியது. இயேசுவின் காலத்தவர்க்கு உணவை விட மானம் பெரிது. பிச்சைக்காரர்களை/வறியவர்களை யாரும் மதித்ததில்லை, மதிப்பதில்லை, இயேசுவைத்தவிர... (Mt 5:3).  

இவர்களையே இயேசு ஏற்றுக்கொண்டார். இவர்களே அவர் நண்பர்கள். ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். (Mt 11:19)

இனி, அன்னை மரியாளுக்கு வருவோம் . கானாவில் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோக அவள் இயேசுவை நோக்கி, ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’... தொடர்ந்து, பணியாளர்களிடம், ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்றார். அவர், ‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’ என அவர்கள் அவற்றை நிரப்ப அது இரசமாக மாறியது. (Jn 2:1ff).

அம்மா, இவரே உம் மகன்’ – ‘இவரே உம் தாய்’ (Jn 19:26-27)அவர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு... வேண்டிக்கொண்டிருந்தார்கள்.’ (Acts 1:14)

‘நம்பிக்கையும்/விசுவாசம் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.’ (யாக்கோபு 2:17)/ ‘கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நான் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.’ (1 Jn 4:12)  கடவுளை அன்பு செய்து சகோதரரை வெறுப்போர் பொய்யர் (1 Jn 4:20 )
Pancretius/ Pettah 09.08.’18



No comments: