Tuesday, February 11, 2025

பங்கிக'கவிதை'கள்... என்னுரை:

பங்கிக்'கவிதை'கள்... என்னுரை: மலையாள திருவி தாங்கூறிலிருந்து 1956-ல் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தோடு (இன்றைய தமிழ்நாடு) மொழிவழியாக இணைக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நான் பயின்ற பூத்துறை அரசு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ் வழி தொடங்கியது நான் ஒன்றாவது வகுப்பில் சேர்ந்த வருடம், 1960. என் தமிழ் மொழிப் பற்று திராவிட இயக்கத்தோடு, அதன் சுய மரியாதை, பகுத்தறிவு பண்புகளோடு இணைந்தது. என் தமிழ் ஆசிரியர்கள் திருவாளர்கள் செண்பகலிங்கம், மயிலேறும்பெருமாள் மற்றும் சேவியர் அவர்களும் என் தமிழ்ப்பற்றுக்கு ஊக்கம் தந்தவர்களில் முக்கியமானவர்கள். பள்ளியில் பயின்ற செய்யுள் தவிர கவிதை, குறிப்பாக புதுக்கவிதை திரையிசை பாடல்கள் வாயிலாக வந்தது. மேலும் அழகியலோடு சேர்ந்து பகுத்தறிவும் தந்த எங்கள் எழில்துறை, இரையுமன்துறை கிராமம் எனது எழுத்துக்கும் எண்ணங்களுக்கும் வண்ணம் சேர்த்தது... புதுக்கவிதைக்கு மரபுக்கவிதையின் இலக்கண வரையறைகள் அத்துணை அவசியமில்லை என்ற ஒரு கருத்து இருக்க, நானும் எழுத தொடங்கினேன், என்றிலிருந்து என்று ஞாபகமில்லை... ஆனால், 1977 முதல் எனது ஓரிரு 'கவிதை'கள் 'கடவுளின் பிரதிநிதி' போன்ற ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அன்றிலிருந்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஏனோ, இப்போது அவற்றை பிரசுரிக்கலாம் என்ற ஒரு எண்ணம் எழ அண்ணன் அருள்சாமியிடமும் தம்பி சாகரிடமும் வாசிக்க கொடுத்தபோது சாகர் பிரசுரிக்க ஊக்கமும் ஒத்தாசையும் தந்துகொண்டேயிருந்தான். அவர்கள் இருவருக்கும், குறிப்பாக சாகருக்கு நன்றி. இவற்றை வாசித்து அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் குமரி ஆதவன் மற்றும் முனைவர் ஆன்சிமோள் ஆகியோருக்கும் வாழ்த்துரை வழங்கிய ஆசிரியர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்களுக்கும், நூலை வடிவமைத்த ஜெ. இ. பதிப்பகத்துக்கும், அச்சேற்றிய சென்னை ரியல் இம்பேக்ட் சொல்யூஷன்ஸ் அச்சகத்துக்கும், வெளியிட்ட கடற்கரை பதிப்பகத்துக்கும் நன்றி. வாசகர் இல்லையென்றால் எழுத்தும் எழுத்தாளனும் ஒருவகை கனவுலகிலேயே இருந்தாகவேண்டும். அப்படியல்லாமல், இதை ஏற்று, வாசித்து உங்கள் எண்ணங்களை எழுதுக... pankyarul2020@gmail.com இந்த, எனது முதல் நூல் எமது பாமரத்தாய் லேனம்மா மற்றும் 'பாகவதர'ப்பா அருளப்பன், 'அம்மையப்பனு' க்கு சமர்ப்பணம்... - அன்புடன் பங்கிராஸ் [

No comments: